(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரியைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட இரண்டு குழுவினர் தங்களின் ஆய்வு அறிக்கையினை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளனர். ஆனால் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இதுவரையில் தெளிவுப்படுத்தப்படவில்லை.

ஆகவே  கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்யலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

 கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பது தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சினால் 11 பேர் அடங்கிய விசேட  நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டது. அத்துடன் மருத்துவ தரப்பினராலும் பிறிதொரு குழு நியமிக்கப்பட்டது.

இவ்விரு குழுவின் அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து இதுவரையில் கவனம் செலுத்தப்படவில்லை.

சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது. வெகுவிரைவில் அறிக்கையின் உண்மை தன்மை பகிரங்கப்படுத்தப்படும். என பிரதமரின் ஊடாக செயலாளர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படும் என வர்த்தமானி வெளியிட்டதில் இருந்து கடுமையான எதிர்ப்புக்கள்  எழுந்தன. இவ்விடயம் குறித்து பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் தொடர் பேச்சுவார்த்தை முன்வைக்கப்பட்டன. முஸ்லிம் சமூகத்தினரது மத உரிமைக்கு அரசாங்கம் மதிப்பு கொடுக்கப்பட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் சமூகத்தினரது உடலை தகனம் செய்வதற்கு முஸ்லிம் சமூகத்தினர் கடுமையான எதிர்ப்பினை ஆரம்பத்தில் இருந்து வெளிப்படுத்தி வந்தார்கள். அத்துடன் சர்வதேச மட்டத்தில் எதிர்ப்பு  போராட்டங்கள், ஜனாசா தகனம் செய்யப்படுவதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டன.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால்  உயிரிழக்கும் முஸ்லிம்களின்  உடலை  மாலைத்தீவு நாட்டில் அடக்கம் செய்ய அரசாங்கம் கோரியதாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் பிறகு இவ்வாறான கோரிக்கை ஏதும்  மாலைத்தீவு அரசாங்கத்திடம் முன்வைக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்தது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என பௌத்த  தேரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக  எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர்.

ஒரு நாடு - ஒரு சட்டம்  என்ற கொள்கையை அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆகவே முஸ்லிம் சமூகத்தினர் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். என  பௌத்த தேரர்கள் வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்துள்ளமை கவனிக்கத்தக்கது.