2021 ஆம் ஆண்டின் புதுவருடக் கொண்டாட்டத்துடன் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியானது ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வொண்டர்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

செஞ்சூரியனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியை தென்னாபிரக்க அணியானது இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களினால் வென்ற பிறகு, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்குடன் இலங்கையை அணியை இன்று எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கை அணியை பொறுத்தவரையில் தொடரை விட்டுக் கொடுக்க கூடாது என்ற நோக்கத்துக்காக ஆடுகளத்தில் முழுப் பலத்துடன் களமிறங்கும். இருந்தபோதும் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடரின் (2-0) தோல்விக்கு பலிவாங்க தென்னாபிரக்க அணியினரின் மனதிலும் வஞ்சனை உள்ளது என்பதை இலங்கை வீரர்களும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இது இவ்வாறிருக்க இன்றைய போட்டியில் இலங்கை அணி எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், பல வீரர்கள் முடக்கப்பட்டுள்ளனர் என்பது தான்.

இவ்வாறான சூழ்நிலையில், அணியில் பல மாற்றங்கள் நிகழும் என்பது தவிர்க்க முடியாதது, எனவே மாற்று வீரர்கள் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

முதல் டெஸ்டில் விளையாடிய தனஞ்சய டி சில்வா, முழு தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளார், அதே நேரத்தில் கசுன் ராஜிதா, லஹிரு குமாரா மற்றும் தினேஷ் சந்திமல் ஆகியோர் உபாதைக்குள்ளானோர் பட்டியலில் உள்ளனர். 

அதேநேரம் சகலதுறை ஆட்டக்காரரான வனிந்து ஹசரங்க மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தொடர்பிலும் சந்தேகம் உள்ளது. எல்.பி.எல். போட்டியின் போது கணுக்கால் காயம் அடைந்த ஓஷாத பெர்னாண்டோவின் உடல் நிலையும் சிறப்பானதாக இல்லை.

இந்த சூழ்நிலை காரணமாக தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற 21 வீரர்களில், அணியில் 14 பேர் மட்டுமே இன்றைய போட்டியில் களமிறங்க எஞ்சியுள்ளனர்.

மினோட் பானுகா மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடும் வாய்ப்புகளை பெறுவதுடன், லஹிரு திரிமன்னே, லசித் எம்புல்தேனியா, துஷ்மந்தா சமீரா ஆகியோரும் களமிறங்குவார்கள்.

இப் போட்டி குறித்து நேற்று கருத்து தெரிவித்த அணித் தலைவர் திமுத் கருணாரத்ன, 

அணியில் பல வீரர்கள் காயமடைந்துள்ளனர். குறிப்பாக தனஞ்சா டி சில்வா, லஹிரு குமாரா, கசுன் ராஜிதா மற்றும் தினேஷ் சந்திமல் ஆகியோருக்கு இன்றைய போட்டியில் விளையாட முடியாது.

சரங்கா லக்மல் விளையாடுவார் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் ஆப்டிட்யூட் சோதனையில் தோல்வியடைந்தார். எனினும் அவரை களமிறக்குவதற்கு விடாது முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.

அவரைப் போலவே, வனிந்து ஹசரங்காவுக்கும் இன்று ஒரு உடற் தகுதி சோதனை உள்ளது. அவர்கள் இருவரும் விளையாட முடிந்தால், நிச்சயமாக விளையாடுவார்கள். 

ஒருவேளை வனிந்து விளையாடாவிட்டால், லசித் எம்புல்தேனியாவுக்கு நாளைய (இன்றைய) போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

நாளைய (இன்றைய) போட்டியில் அதிகபட்ச வலிமை எங்களிடம் இல்லை. நாளைய (இன்றைய) ஆட்டத்தில் 11 சிறந்த வீரர்கள் எங்களிடம் இல்லை, ஏனெனில் வீரர்கள் காயமடைந்துள்ளனர். 

ஆனால் புதுமுகங்கள் நாளைய போட்டியில் ஏதேனும் மாற்றத்தை செய்வார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் திறமைகளைப் பார்க்க எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பும், அவர்களின் திறமையைக் காட்ட ஒரு நல்ல களமும் அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.