அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா, ரிஷாத் பந்த், சுப்மான் கில், பிரித்வி ஷா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அவுஸ்திரேலிய அணியுடன் இருபதுக்கு : 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், இரு அணி வீரர்களும் உயர் பாதுகாப்பில் இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு வெளியில் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, ரிஷாத் பந்த், சுப்மான் கில், பிரித்வி ஷா மற்றும் நவ்தீப் சைனி ஆகிய 5 பேர் உயர் பாதுகாப்பு விதிகளை மீறி ஒரு ஹொட்டலுக்குச் சென்று உணவு சாப்பிட்டு புத்தாண்டைக் கொண்டாடினர் . 

இதன்போது அங்கு வந்த இந்திய ரசிகர் ஒருவர் இந்திய வீரர்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து செல்பி எடுத்துச் சென்று அந்தப் புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் கண்டனம் தெரிவித்தது. 

இவ்வாறாதொரு நிலையிலேயே புத்தாண்டு தினத்தையொட்டி கொரோனா விதிமுறைகளை மீறி ஹொட்டலுக்கு சென்று அங்கு உணவருந்தியமைக்காக அவர்கள் மருத்துவக் குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பி.சி.சி.ஐ மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.