ஆப்கானிஸ்தானில்   ஊடகவியலாளர்  ஒருவர் இனந்தெரியாத  நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் பெரோஸ் கோ நகரில்  வசித்து வந்த சமூக ஆர்வலரும்  ஊடகவியலாளருமான  பிஸ்மில்லா அடில் ஐமக் என்பவரே ஆயுதமேந்திய மர்ம நபர்களால் நேற்று முன்தினம் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.இவர் உள்ளூர் வானொலி சேவையில்  பிரதம ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில், கடந்த 2 மாதங்களில் படுகொலை செய்யப்பட்ட 6 ஆவது ஊடவியலாளர் இவராவார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி  ஊடகவியலாளரும்  கஜினி மாகாண பத்திரிகையாளர்கள் அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வந்த ரகமதுல்லா நிக்ஜாத் என்பவர் ஆயுதமேந்திய நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதேபோன்று, கடந்த நவம்பர் 7ஆம் திகதியில்  இருந்து பல்வேறு சம்பவங்களில், டோலோ நியூஸ் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் செய்தியாளர் யாமா சியாவாஷ், வானொலி நிருபர் எலியாஸ் டேயீ, தொலைக்காட்சி தொகுப்பாளர் மலாலா மைவாண்ட் மற்றும் ஏரியானா நியூஸ் நிறுவனத்தின் செய்தியாளர்  பர்தீன் ஆமினி ஆகியோர் கொல்லப்பட்டனர்.