தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ரி.இமான் ஆன்மீக அல்பம் ஒன்றை இசை அமைத்து தயாரித்து தயாரிப்பாளராக மாறி இருக்கிறார்.

தமிழ் திரை இசை உலகில் கிராமிய மணம் கமழும் பாடலுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. 

இதனை உணர்ந்த இசை அமைப்பாளர் ரி.இமான் ஏராளமான கிராமிய மணம் கமழும் மெல்லிசை பாடல்களை உருவாக்கி, ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருபவர். 

இதுவரை இசையமைப்பாளராகவும், பாடகராகவும், இசைக் கலைஞராகவும் மட்டுமே பணியாற்றி வந்த இவர், தற்போது 'தேங்க்யூ ஜீசஸ்' என்ற பெயரில் ஆன்மீக அல்பம் ஒன்றிற்கு இசையமைத்து தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார்.

இதற்காக ரி புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, 'தேங்க்யூ ஜீசஸ்' என்ற பெயரில் ஆன்மீக அல்பம் ஒன்றை தயாரிக்கிறார். 

இந்த அல்பம் இயேசு கிறிஸ்துவை போற்றி, ஆங்கில மொழியில் ஆன்மிக அன்பர்கள் எழுதி பாடும் எட்டு பாடல்கள் இடம்பெறுகிறது.

இதுதொடர்பாக இசை அமைப்பாளர் ரி இமான் பேசுகையில், 

'ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தற்போது ஒரு நிறுவனத்தைத் தொடங்கி ஆன்மிக அல்பத்தை தயாரித்திருக்கிறேன். 

இந்த அல்பத்தின் ஓடியோ பங்குதாரராக 'திவோ மியூசிக்' நிறுவனத்தினர் இணைந்திருக்கிறார்கள்.. இதனைத் தொடர்ந்து திரை இசை இல்லாத சுயாதீன அல்பங்களையும் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறேன். இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்' என்றார்.

திரைத்துறை மட்டுமல்லாமல் இசை அமைப்பாளர் ரி. இமான் பங்குபற்றும் அனைத்து விழாக்களிலும் மேடை ஏறி பேச தொடங்கும்முன் 'தேங்க்யூ ஜீசஸ்..' என்று சொல்வது வழக்கம். 

தற்பொழுது அந்தப் பெயரிலேயே அவரது முதல் அல்பத்தை தயாரித்து வெளியிடுவது அவரது ரசிகர்களுக்கும், கிருஸ்தவ மதத்தைச்  சார்ந்த அன்பர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.