(நா.தனுஜா)

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 40 இலட்சம் ரூபா நிதியை மக்களுக்குப் பகிர்ந்து வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

பாராளுமன்ற உறுப்பினருக்கான மாதாந்த சம்பளம் மற்றும் பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு ஆகியவற்றை பெற்றுக்கொள்ளாமையினால் அந்த நிதி அரச திறைசேரியில் சேர்க்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்திருக்கும் அவர்,

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியுடன் அந்த நிதியை மீளப்பெற்றுத்தருமாறு பாராளுமன்றச் செயலாளரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்ததாகவும் கூறியிருக்கிறார்.

அவரது கோரிக்கைக்கு அமைவாக 40 இலட்சம் ரூபா நிதி பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும், அந்த நிதியை தேவைகள் காணப்படும் மக்களுக்குப் பகிர்ந்து வழங்குவதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருக்கிறார்.

இதன்போது பொருளாதார ரீதியில் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் கலைஞர்கள் மற்றும் படையினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவ்வாறான நிதித்தேவை உள்ளவர்கள் தனது செயலாளருடனோ அல்லது பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களின் ஊடாகவோ தன்னுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.