(செ.தேன்மொழி)
அம்பலங்கொட பகுதியில் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
அம்பலங்கொட பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் சோதனை நடவடிக்கைகளின் போது, மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்ற சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது இவரிடமிருந்து மீட்கப்பட்ட எட்டு பக்கற்றுகளிலிருந்து ஒரு கிலோ 600 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு இந்த ஹெரோயின் போதைப் பொருள் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பிலும், இதற்காக உதவி ஒத்தாசைகளை வழங்கியவர்கள் யார் என்பது தொடர்பிலும் கண்டறிவதற்காக பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபரை நீதிமன்ற அனுமதியுடன் ஏழு நாட்கள் அவரை தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தவும் பொலிஸார் எதிர் பார்த்துள்ளனர்.
நாட்டில் இடம்பெற்று வரும் போதைப் பொருள் கடத்தல்களை ஒழிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கபட்டு வருகின்றன.
அதற்கமைய அண்மையில் கூட வெலிகம பகுதியில் வைத்து 100 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.