(எம்.எப்.எம்.பஸீர்)

ஐஸ் போதைப் பொருளை கடத்தி வந்துகொண்டிருந்ததாக நம்பப்படும் ட்ரோலர் படகொன்றினை காலி துறைமுகத்தை அண்டிய ஜாகொட்டுவ கடற்பரப்பில் வைத்து கடற்படையினரின் உதவியுடன் பொலிஸ் போதைப் பொருள் தட்டுப்புப் பிரிவினர்  கைப்பற்றியுள்ளனர்.

  

இதன்போது படகிலிருந்த 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

ஜா எல - திக்கோவிட்ட துறைமுகத்திலிருந்து குறித்த படகு பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில், இப்படகு சர்வதேச  கடற்பரப்பில்  போதைப் பொருளைப் பெற்று திரும்பிக்கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில் கடர்படையினரின் உதவியுடன் பொலிஸார் கடலில் வைத்து குறித்தப் படகை மடக்கிப்பிடித்துள்ளனர்.

பொலிஸாரும் கடற்படையினரும் படகை சுற்றிவளைப்பதை அறிந்துகொண்ட படகில் இருந்த சந்தேக நபர்கள் பல கிலோ எடை கொண்ட போதைப்பொருள் பொதிகளை கடலில் வீசியுள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் படகிலிருந்து 5.9 கிலோ ஐஸ் போதைப்பொருளும் ஹெரோயின் போதைப் பொருள் 2.1 கிலோவும் கைப்பற்றப்ப்ட்டுள்ளன.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள்,  பாணம, தெவிநுவர,  நீர்கொழும்பு, கந்தபொல பகுதிகளைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.