கடந்த முப்பது வருட கால இனப்பிரச்சினை சம்பந்தமாக நடைபெற்ற கொடூர யுத்தத்தில் அரசுக்கு எதிராக ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் நாட்டிலுள்ள சிறைகளில் நூற்றுக்கும் கிட்டியளவில் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டு தொடர்ச்சியாக பழிவாங்கப்பட்டு வருகிறார்கள் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சியின் வன்னி மாவட்டச் செயலாளர் என்.பிரதீபன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

வல்லாதிக்க நாடுகளின் நகர்வுகள் தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும்: புதிய  ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி - Tamilwin

மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசியல் கைதிகள் மீதான வழக்குகள் யுத்தம் முடிவுற்று பதினொரு வருடங்கள் கடந்தும் விசாரணை செய்யப்படாமல் இருந்து வருகிறது. இது அப்பட்டமான நீதிமறுப்புச் செயற்பாடாகும். 

'காலம்தாழ்த்தி வழங்கப்படும் நீதி - நீதி மறுப்புக்குச் சமனாகும்' என்பதை அரசு கவனத்தில் கொள்ளல் வேண்டும் எனவும் அனைத்து அரசியல் கைதிகளையும் எதுவித நிபந்தனையும் இன்றி பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறும் கோருகின்றோம்.  

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் வவுனியா பொதுவைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. 

அரசியல் கைதிகளின் விடுவிப்பில் அக்கறையுள்ள அனைத்து தரப்பினரையும் கலந்து கவனயீர்ப்பை வலுவூட்டூமாறு கட்சி கேட்டு நிற்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.