(செ.தேன்மொழி)

மஹவ பகுதியில் இரவு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியமை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இரு சந்தேகநபர்கள் தேடப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மஹவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு 11  மணியளவில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரில் ஒருவரை சந்தேக நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். 

இதன்போது, படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மஹவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நிக்கவெரட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரவு நேர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் நடமாடிக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளதுள்ளனர். 

அவர்களிடம்  விசாரணை செய்தபோது, சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தால்  தாக்கி தப்பிச் சென்றுள்ளனர். 

பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளுக்கமைய கூரிய ஆயுத்தால் தாக்கிய சந்தேகநபரும் அவருடன் இருந்த இன்னுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இருவரை கைது செய்வதற்காக பொலிஸார் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்க பயன்படுத்திய கூரிய ஆயுதத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.