(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து மாத்திரமின்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும் வெகுவிரைவில் பலர் எம்முடன் இணைந்து கொள்ள தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  இதனை மிக நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

Articles Tagged Under: சிவில் நிர்வாக சேவை | Virakesari.lk

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

மக்களின் நிலைப்பாடுகள் , தொழிற்சங்கள் மற்றும் அரசியல் நிபுணர்களின் பரிந்துரைகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த யாப்பு உருவாக்கத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க , யாப்பு உருவாக்க குழுவின் அங்கத்தவர்களாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான திசத் விஜயமுனி , ஹர்மான் ஹசிம் , சட்டத்தரணி நிமேஷ் என்போரும் உள்ளடங்குகின்றனர்.

ஏனைய கட்சிகளை விட ஜனநாயக முறையில் இந்த யாப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மக்களிடம் அதிகாரம் காணப்படும் யாப்பாகவே நாம் இதனை உருவாக்கியுள்ளோம். ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பையும் அடிப்படையாகக் கொண்டே இந்த யாப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பும் காலப் போக்கில் சர்வாதிகாரமானதாக மாற்றப்பட்டமையினாலேயே மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளனர்.

எமது நிறைவேற்றுக்குழுவிலும் மக்களால் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே அங்கம் வகிக்கின்றனர். அதே போன்று கீழ் மட்டத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகளும் இதில் உள்ளடங்குகின்றனர். கட்சியின் செயற்குழு உறுப்பினர்களை 75 ஆக வரையறுத்துள்ளோம். இதில் கட்சியின் தலைவர் , செயலாளர் , உப தலைவர்கள் , சிரேஸ்ட தலைவர்கள் உள்ளிட்டோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். நிறைவேற்று குழுவின் கூட்டத்தை வருடத்திற்கு ஒரு முறை கூட்டுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வருடாந்தம் சம்மேளனத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் கட்சி உறுப்புரிமையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பானது ஒரு தலைவரை அடிப்படையாகக் கொண்டதோ அல்லது ஒரு குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டதோ அல்ல. எனவே ஏனைய பல கட்சிகளையும் இணைந்து பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்க தீர்மானித்துள்ளோம். 

நிறைவேற்றுக்குழு கூடியே கட்சியின் தலைவரை தெரிவு செய்யும். மாறாக ஐக்கிய தேசிய கட்சியில் பின்பற்றப்படுவதைப் போன்ற முறைமை இவ்விடயத்தில் பின்பற்றப்பட மாட்டாது. கட்சி தலைவர் பொறுத்தமற்றவர் அல்லது ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் அது குறித்து அறிவிக்க கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிப்பதற்கு உரிமை உண்டு.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து மாத்திரமின்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும் பலர் எம்முடன் இணைந்து கொள்ள தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை மிக நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றோம் என்றார்.