(எம்.மனோசித்ரா)

2024 இல் மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. அதற்கு முன்னர் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களும் இடம்பெறவுள்ளன. எந்த தேர்தலானாலும் அதற்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தற்போது தயாராகவுள்ளது என்று அதன் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

Articles Tagged Under: நிலைப்பாடு திஸ்ஸ அத்தனாயக்க | Virakesari.lk

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 19 ஆம் திகதி பண்டாரவலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு யாதெனில் சர்வாதிகார தலைமைத்துவம் என்பதாகும். 

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு மிகவும் ஜனநாயக ரீதியில் உருவாக்கப்பட்டுள்ளது. பலரது பரிந்துரைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முக்கிய தீர்மானங்களை எடுக்கும் போது அனைவரதும் இணக்கப்பாடு கவனத்தில் கொள்ளப்படும். எந்தவொரு தீர்மானமும் தன்னிச்சையாக எடுக்கப்பட மாட்டாது.

பொதுத் தேர்தலின் போது தற்காலிக யாப்பொன்றின் ஊடாகவே போட்டியிட்டோம். எனினும் தற்போது கட்சிக்கான ஸ்திரமான யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் தேர்தல்களில் திட்டமிட்ட வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும். 2024 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. இதற்கு முன்னர் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி தேர்தல் என்பவற்றுக்கும் முகங்கொடுக்க நேரிடும். எந்த தேர்தலானாலும் அதற்கு முகங்கொடுப்பதற்கு நாம் தற்போது தயாராகவுள்ளோம்.

தற்போது நாட்டு மக்களுக்கு காணப்படும் ஒரேயொரு மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தியும் , சஜித் பிரேமதாசவும் மாத்திரமேயாகும். கட்சி யாப்பு எதிர்காலத்திற்கு ஏற்ற வகையிலேயே நியமிக்கப்பட்டுள்ளது. இன , மத பேதம் இன்றி நிருவப்பட்டுள்ளது. இலங்கையின் தனித்துவத்தன்மையை பொதுவாக ஏற்றுக் கொண்ட யாப்பாக எமது யாப்பு அமைந்துள்ளது. 

இதன் சின்னம் தொலைபேசி என்பதில் மாற்றமில்லை. எனினும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஏனைய கட்சிகளுடன் இணைந்து அமைக்கப்படும். எனினும் அது தொடர்பில் இன்னும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

தற்போது எம்முடன் இணைந்து செயற்படுகின்ற அனைத்து கட்சிகளும் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து அதில் அங்கத்துவம் வகிக்க தயாராகவுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க மாத்திரம் அவரது கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகள் என்பது மக்களின் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது அவை ஜனாதிபதிகளின் பிரதிநிதிகளான ஆளுனர்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. தொடர்ந்தும் இதற்கு அனுமதிக்க முடியாது. 

வடக்கு கிழக்கில் காணப்படும் அதிகார பிரச்சினைக்கான தீர்வாகவே இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. இதனை அரசாங்கத்தால் தனித்து நீக்க முடியாது என்றார்.