(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் மாகாண சபை தேர்தலை நடத்தாமலிருக்கவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தலை நடத்துவதாயின் இரண்டு பிரதான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என தொலைநோக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தல் குறித்து தற்போது பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் முதல் அலையினை அரசாங்கம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதால் பாதுகாப்பான முறையில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால்  கொவிட்-19 வைரஸ் இரண்டாம் அலை குறுகிய காலத்துக்குள் தீவிரமடைந்துள்ளது.

நெருக்கடியான சூழ்நிலையில்  மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமாயின் இரண்டு பிரதான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். மாகாண சபை தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்ற பிரச்சினை காணப்படுகிறது. கடந்த அரசாங்கம் தேர்தல் முறைமையில்  முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.

தேர்தல் முறைமை குறித்து முரண்பாடற்ற தீர்மானத்தை பெற பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்க வேண்டும். ஆகவே அதற்கான காலவகாசம்  போதாது. அத்துடன் மாகாண சபை தேர்தலை கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் நடத்த முடியாது. ஆகவே  நெருக்கடியான சூழ்நிலையிலும் மாகாண சபை தேர்தலை நடத்தாமலிருக்கவே தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.