(எம்.ஆர்.எம்.வஸீம்)

மஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பாக தேடிப்பாக்க நியமிக்கப்பட்ட குழுவின் பூரண அறிக்கை இன்று நீதி அமைச்சர் அலிசப்ரியிடம்  குழுவின் தலைவியினால் நீதி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.

மஹர சிறைச்சாலையில் கடந்த மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தை அடுத்து, அதுதொடர்பாக தேடிப்பார்க்க முன்னாள் மேல் நீதிமன்ற நீதியரசர் குசலா சரோஜினி தலைமையில் 5 பேர் கொண்ட குழு நீதி அமைச்சர் அலிசப்ரியினால் கடந்த மாதம் 29ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது. 

குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த 7ஆம் திகதி கையளிக்கப்பட்ட நிலையில் பூரண அறிக்கை இன்று கையளிக்கப்படப்பட்டிருக்கின்றது.

இதன்போது நீதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த மாதம் 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றது துரதிஷ்டவசமான சம்பவமாகும். இந்த சம்பவத்தை விஞ்ஞான ரீதியிலும் மனிதாபிமான அடிப்படையிலுமே பார்த்தோம். 

இவ்வாறான சம்பவம் ஏன் இடம்பெற்றது என்பதை தேடிப்பார்த்து, அதற்கான காரணங்களை அறிந்து, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கே 5பேர் கொண்ட குழுவொன்றை நியமித்திருந்தோம்.

குறித்த குழு ஒருவாரத்தில் இடைக்கால அறிக்கையை கையளித்திருந்தது. இடைக்கால அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தோம். தற்போது பூரண அறிக்கை கையளிக்கப்பட்டிருக்கின்றது. அறிக்கையை நன்கு ஆராய்ந்து எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன் நாங்கள் சுயாதீன குழுவொன்றையே நியமித்தோம். அதற்கு நாங்கள் எந்தவகையிலும் தலையிடவில்லை. அவர்கள் சுயாதீனமாக செயற்பட்டிருக்கின்றனர். இவ்வாறான சம்பவம் ஏன் இடம்பெற்றது என்ற உண்மையை நாங்கள் கண்டறியவேண்டி இருக்கின்றது.

அத்துடன் சிறைச்சாலைகளில் இடம்பெற்றுவரும் நெருக்கடி நிலையையை குறைப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நீதிச்சேவை ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்துடன் கலந்துரையாடி வழக்கு நடவடிக்கைகளை வீடியோ தொழிநுட்பம் ஊடாக மேற்கொள்வதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதேபோன்று நீதிவான் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும் சிறைச்சாலைகளின் நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்காக இதுவரை போதைக்கு அடிமையாகி இருந்த கைதிகள் 8ஆயிரத்தி 500பேரை பிணையில் விடுதலை செய்திருக்கின்றோம். பாரிய சிறைச்சாலை கட்டடதொகுதி ஒன்றையும் நிர்மாணிக்க இருக்கின்றோம் என்றார்.