(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாகாணசபைத் தேர்தல்களை  நடத்துவது தொடர்பில் திங்கட்கிழமை இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், இறுதியில் இப்போது தேர்தலை நடத்துவதில்லை என்றே தீர்மானிக்கப்பட்டது என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:

நாட்டைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான சிவனொளிபாத யாத்திரைக்காலம் ஆரம்பமாகியிருக்கிறது. எனினும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இம்முறை சிவனொளிபாதமலைக்குச் செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்றே நம்புகின்றோம். கடந்த வருடம் சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான யாத்திரிகர்கள் கலந்துகொண்டார்கள். இம்முறை குறைந்தளவானோரே கலந்துகொண்டாலும் கூட, அவர்கள் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றும் அதேவேளை சுற்றாடலை மாசுபடுத்துவதைத் தவிர்த்துக்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அதுமாத்திரமன்றி சுற்றாடலை மாசுபடுத்தும் விதமாக செயற்படுவோருக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அண்மையில் உக்ரேனிலிருந்து விவசாயக்கழிவுகள் அடங்கிய 28 கொள்கலன்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. இவை நாட்டிற்குள் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஒருவாரகாலத்திற்குள் விசாரணை அறிக்கை கிடைக்கப்பெறும் என்பதுடன் இதில் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு தொடர்புபட்டிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்ததாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு மின்கட்டணம் அறவிடப்படமாட்டாது என்று அப்போதைய மின்வலு அமைச்சர் கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் கருத்தொன்றை வெளியிட்டார். நாம் அவ்வாறு ஒருபோதும் கூறவில்லை. மாறாக மின்சாரக்கட்டண அறவீட்டில் நிவாரணம் வழங்கப்படும் என்றே நாம் கூறினோம். அதற்கேற்ப நிவாரணத்தையும் வழங்கினோம். ஆகவே 'ஜோக்கர்' போன்று செயற்படாமல், உண்மைகளைக்கூறி அரசியல் செய்யுமாறு நான் சஜித் பிரேமதாஸவிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இதன்போது கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்வது குறித்து எழுந்திருக்கும் சர்ச்சை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் பின்வருமாறு கூறினார்:

இவ்விடயத்தில் அரசியல் ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்படாது. இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட தொழில்நுட்பக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. சடலங்களைத் தகனம் செய்வது தொடர்பான சர்ச்சைக்கு விஞ்ஞானபூர்வ அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றே கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போதும் வலியுறுத்தப்பட்டது.

ஆகவே இப்பிரச்சினையை மதரீதியாகவோ அல்லது இனவாத அடிப்படையிலோ நோக்காமல், தொழில்நுட்பக்குழு சுயாதீனமாக வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் செயற்படுவதே உகந்ததாகும். சடலங்களைத் தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்ற தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொள்ளாது. மாறாக தொழில்நுட்பக்குழுவின் சுயாதீன தீர்மானத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பதிலளித்தார்.