(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தயாரிக்கப்பட்ட தேசிய சிகிச்சை முறைமைக்கு நாளை ஆயுர்வேத திணைக்களத்தின் பாரம்பரிய கோட்பாட்டு குழுவின் அனுமதி கிடைக்கப் பெறும் என மருந்து உற்பத்தி இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

Department of Ayurveda - Home | Facebook

அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய மட்டத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட சிகிச்சை முறைமை, நதேசிய பாணம் முறையான விஞ்ஞான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

கேகாலை ஆயுர்வேத வைத்தியர் தம்மிக பண்டார கண்டுப்பிடித்த ஆயுர்வேத பாணம் குறித்து மாறுப்பட்ட கருத்துக்கள் பல குறிப்பிடப்படுகின்றன.

தேசிய மட்டத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட மருத்துவ  சிகிச்சை முறைமைக்கு நாளை ஆயுர்வேத திணைக்களத்தின் பாரம்பரிய கோட்பாட்டு குழுவினால் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கொவிட்-19  தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதமளவில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் சாத்தியம் உள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மக்கள் கட்டாயம் பின்பற்றினால் நெருக்கடியான சூழ்நிலையை இயலுமான அளவில் கட்டுப்படுத்த முடியும். தேசிய மட்டத்தில் மருந்துற்பத்தியை மேம்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அம்பாந்தோட்டை பகுதியில் மருந்து உற்பத்தி வலயத்தை  நிர்மாணிக்கும் பணிகள் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றார்.