உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் தயாராகி வரும் 'விக்ரம்' படத்தில் 'நடனப்புயல்' பிரபுதேவா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'விக்ரம்'. 

இந்தப் படத்தில் உலக நாயகன் கமலஹாசன் கதையின் நாயகனாக நடிக்க,  அவருடன் 'சூப்பர் டீலக்ஸ்' பட புகழ் நடிகர் பகத் பாசில் நடிக்கிறார். 

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில் இப்படத்தில் பணிபுரிய நடிகர் பிரபுதேவா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

நடன இயக்குனராகவும், திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் பன்முக திறமையுடன் வலம் வரும் பிரபுதேவா கமலஹாசனுடன் இணைந்து பணியாற்றுவதை அவருடைய ரசிகர்கள் வரவேற்று இருக்கிறார்கள். 

கமலஹாசனும் பிரபுதேவாவும் ஏற்கனவே 'காதலா காதலா' என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பதும், பிரபுதேவா தற்போது 'பொன்மாணிக்கவேல்', 'தேள்', 'ஊமைவிழிகள்', 'பாகிரா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.