நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்’’ என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 ``என் உயிரே போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கைத் தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலுபேர் நாலுவிதமாக என்னைப் பற்றிப் பேசுவார்கள். என்பதற்காக என்னை நம்பி, கூட வருபவர்களை பலிக்கடா ஆக்க நான் விரும்பவில்லை.

அனைத்திற்கும் காரணம் என்னுடைய உடல் நிலை தான். இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கின்றேன்.

நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது. 

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன். 

நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. உண்மையையும் வெளிப்படை தன்மையையும் விரும்பும் என் நலத்தில் அக்கறையுள்ள என்மேல் அன்பு கொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.