(எம்,ஆர்.எம்.வஸீம்)

கொவிட்- 19 தொற்றினால் மரணிக்கும் சடலங்களை அடக்கம் செய்ய நிலத்தடி நீர் மிகவும் ஆழத்தில் இருக்கும் இரண்டு பிரதேசங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு தெரியப்படுத்தியுள்ளேன் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொவிட்- 19 தொற்றினால்  மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய நிலத்தடி நீர்மட்டம் இல்லாத பிரதேசங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  

கொவிட்- 19 தொற்றினால்  மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் முஸ்லிம் உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று பிரதமர் தலைமையில் இடம்பெற்றது. இதற்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்போது எனக்கு ஒருவிடயம் பாரப்படுத்தப்பட்டது. அதாவது, நிலத்தடி நீர் இல்லாத இரண்டு பிரதேசங்களை ஆராய்ந்து தெரிவிக்குமாறு பிரதமர் தெரிவித்தார்.

அதன் பிரகாரம் நிலத்தடி நீர் அளவு பூமிக்கு மிகவும் ஆழத்தில் இருக்கும் பிரதேசங்கள் இருக்கின்றதா?. அந்த பிரதேசங்கள் எங்கு இருக்கின்றன என நான் எமது புவி விஞ்ஞான அதிகாரியிடம் கேட்டேன். அதுதொடர்பில் ஆராய்ந்து அவர் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அவரது அறிக்கையில் நிலத்தடி நீர் இல்லாத   இரண்டு இடங்களை தெரிவித்திருந்தார். அந்த இரண்டு இடங்களிலும் 30அடி ஆழத்தில் நீர் இல்லை எனவும் அங்கு எந்த காலத்திலும் நீர் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

அந்த இடங்களில் ஒன்று மன்னார் மாவட்டத்தின் மரிச்சிக்கட்டு பிரதேசமாகும். மற்றது கிழக்கு மாகாணத்தில் இறக்காமம் பிரதேசமாகும். அவரின் அறிக்கையை நான் தற்போது பிரதமருக்கும் சமர்ப்பித்திருக்கின்றேன். சுகாதார அமைச்சருக்கும் சமர்ப்பித்திருக்கின்றேன்.

அதனால் சுகாதார அதிகாரிகள் மீண்டும் சந்திக்கும்போது இந்த அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து பார்க்க முடியும் என்றார்.