செஞ்சுரியனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸுக்காக நான்கு விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களை எடுத்துள்ளது.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 396 ஓட்டங்களை குவித்துள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி தற்போது வரை ஆறு விக்கெட்டுகளுடன் 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளது.

தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடுவதற்காக தென்னாபிரிக்க அணி சார்பில் களமிறங்கிய டீன் எல்கர் மற்றும் ஐடன் மார்க்ராம் ஜோடி  முதல் விக்கெட்டுக்காக 141 ஓட்டங்களை சேர்த்தது.

அதன் பின்னர் மார்க்ராம் 68 ஓட்டங்களுடன் விஷ்வ பெர்னாண்டோவின் பந்து வீச்சில் தசூன் சானக்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க தொடர்ந்து வந்த வான்டர் டாசனும் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதனால் தென்னாபிரிக்க அணி 200 ஓட்டங்களுக்கு தனது இரண்டாவது விக்கெட்டை பறிகொடுத்தது. 

இந் நிலையில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட எல்கர் 95 ஓட்டங்களுடன் சானக்கவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்தபடியாக தென்னாபிரக்க அணித் தலைவர் டீகொக்கை வனிந்து ஹசரங்க 18 ஓட்டங்களுடன் வெளியேற்றினார்.

டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் வனிந்து ஹசரங்கவின் சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையின் முதல் விக்கெட் இதுவாகும்.

ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்க அணி 220 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. எனினும் 5 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த டுப்பிளஸ்ஸி (55) மற்றும் டெம்பா பவுமா (41) ஆகியோர் நிலைத்து நின்றாட தென்னாபிரிக்க அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 317 ஓட்டங்களை குவித்தனர்.

தென்னாபிரிக்க அணியில் மீதமுள்ள துடுப்பாட்ட வீரர்கள் மூன்றாம் நாளான இன்று இலங்கை அணியின் பந்து வீச்சுகளுக்கு தாக்குபிடித்தாடினார், இதுவோர் கடினமான போட்டியாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 396 ஓட்டங்களை எடுத்துள்ளது. இந் நிலையில் இலங்கை அணி எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை என்னவென்றால், அணியின் பலமான பந்து வீச்சாளர்களான தனஞ்சய டி சில்வா மற்றும் கசுன் ராஜிதா ஆகியோர் காயங்கள் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளமை ஆகும்.