( இராமேஸ்வரத்திலிருந்து ஆ.பிரபுராவ் )

ராமேஸ்வரம் மீனவர்கள போராட்டத்தை கைவிட்டு  இன்று வழக்கம் போல மீன்பிடிக்கச் சென்றனர். 12 நாட்களாக வெறிச்சோடிக்கிடந்த துறைமுகம் பரபரப்புடன் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினரின் தொடர்தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைளுக்கு கண்டனம் தெரிவித்தும்  சிறைப்பிடிக்கப்பட்ட 77 மீனவர்களையும் 112 விசைப்படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும்  கடந்த 22 ஆம் திகதி முதல்  தொடர்வேலைநிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபட்டுவந்தனர் .

இந் நிலையில் கடந்த மாதம் 25 ஆம் திகதி மீனவர்கள் விடுதலைசெய்யப்பட்டனர் இதனையடுத்து 29 ஆம் திகதி வெளியுறவுத்துறை அமைச்சருடன் மீனவப்பிரதிநிதிகளின் பேச்சுவார்தையில்  மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பாரம்பரிய கடல் பகுதியில் மின்பிடி உரிமையை பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

  

இதனையடுத்து 12 நாட்களுக்குப் பின் இன்று மீனவர்கள் வழக்கம் போல மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்கச் சென்றனர்.

மேலும் தொழிலாளா்கள் பற்றாக்குறை மற்றும் வழமைக்குமாறாக பலத்த காற்று வீசிவருவதால் 300க் கும் மேற்ப்பட்ட  சிறியவகை படகுகள் மீன்பிடிக்கச்செல்லவில்லை. 12 நாட்களாக வெறிச்சோடிக்கிடந்த ராமேஸ்வரம் துறைமுகம் இன்று பரபரப்புடன் காணப்பட்டது.