முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சனிக்கிழமை அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் வைரஸ் மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுவதால் தொற்றாளருடன் தொடர்பினை மேற்கொண்ட நபர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு பி.சி.ஆர் பரிசோதயினையை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தற்போதைய வடக்கு மாகாண கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆ.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சனிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 37 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
குறித்த நபர் தம்புள்ளை சந்தைக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்து வந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்குயிருப்பு பிரதேசத்தில் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது குறித்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் குறித்த பகுதியில் பல பொதுமக்களோடு தொடர்பிலே இருந்திருக்கின்றார்.
எங்களுக்கு கிடைத்த ஆய்வுகூட முடிவுகளை பார்க்கின்ற போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் கொரோனா மிகவும் வீரியமானதாக இருக்கின்றது.
எனவே அவரில் இருந்து பலருக்கு தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இதனால் அவரோடு தொடர்பிலே இருந்தவர்கள் தயவு செய்து உங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு பரிசோதனைகளை முன்னெடுப்பதன் மூலம் உங்களது பிரதேசத்திலே இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.
இதனை போன்றே வடக்கு மாகாணத்தில் இருக்கும் அனைத்து மக்களும் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களோடு தொடர்புகளை மேற்கொண்டிருந்தார் உடனடியாக உங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்பினை மேற்கொண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுவதன் மூலம் வடக்கு மாகாணத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றார்.