(எம்.மனோசித்ரா)

வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேற்கு, மத்திய மாகாணங்களிலும் பதுளை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. பலத்த மழை பெய்யும் போது மின்னல் தாக்கம் ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை இவ்வாறு பலத்த மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் கிழக்கு , வடகிழக்கு, வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணம் ஆகியவற்றில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து பொத்துவில் வழியாக புத்தளம் , காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஆகிய கடற்பரப்புக்களிலும் இவ்வாறு அதிக வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.