(எம்,ஆர்.எம்.வஸீம்)

முதலாளிமார் சம்மேளத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார். அதனால் ஜனவரியில் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்காவிட்டால் தொழிற்சங்க போராட்டத்துக்கு செல்வோம் என தாழ்நில தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ருவன் கால்லகே தெரிவித்தார்.

தோட்டத்தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக்கு முதலாளிமார் சம்மேளம் விதித்திருக்கும் நிபந்தனை தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஜனவரியில் ஆயிரம் ரூபாவாக வழங்குவதாக வரவு செலவு திட்டத்திலேயே தெரிவித்தது. தோட்டத்தொழிலாளர்களுக்கு வரவு செலவு திட்டத்தில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவது இது முதல் தடவையாகும். 

இதன்போது எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. ஆனால் வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்காமல் இருப்பதற்கே தோட்ட முதலாளிமார் முயற்சிக்கின்றனர். வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பளத்துக்கு யாருக்கும் நிபந்தனை விதிக்க முடியாது. அதிகரிக்கப்பட்ட ஆயிரம் ரூபா ஜனவரியில் இருந்து வழங்கப்படவேண்டும். இல்லாவிட்டால் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்திருக்கின்றோம்.

அத்துடன் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது முதலாளிமார் சம்மேளனம் இரண்டு நிபந்தனைகளை விதித்திருந்தது. 

அதன் பிரகாரம் மேலதிக இரண்டு கிலோ தேயிலை கொழுந்து பறிப்பதற்கு நாங்கள் தயார். ஆனால் உரிய காலாண்டுக்கு தேயிலை தோட்டங்களுக்கு உரம் வழங்கும் இனக்கப்பாட்டின் அடிப்படையிலாகும். 

அதேபோன்று வருடத்துக்கு 180 நாட்கள் கட்டாயம் தொழில் செய்யவேண்டும் என்ற நிபந்தனையையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஏனேனில் தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்தால்தான் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். அவர்கள் ஒவ்வொருநாளும் வேலைக்கு செல்வார்கள். அதனால் முதலாளிமார் சம்மேளனத்தின் இரண்டு நிபந்தனைகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என்பதை தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்ட அமைச்சருக்கு  தெரிவித்துக்கொள்கின்றோம். 

மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வினால் வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டதாகும். வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்படும் ஏனைய முன்மொழிவுகளை நிறைவேற்ற முடியுமாக இருந்தால் ஏன் தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளத்தை மாத்திரம் ஜனவரியில் இருந்து அதிகரிக்க முடியாது என கேட்கின்றோம். 

எனவே தோட்ட முதலாளிமார் விதித்திருக்கும் இரண்டு நிபந்தனைகளயும் நாங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதால், தோட்ட முதலாளிமார்களுடன் இதன் பின்னர் கலந்துரையாடல் தேவையில்லை. அதனால் வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டதன் பிரகாரம் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கவேண்டும் என்றார்.