தேசியன்

 “சம்பள விவகாரத்தில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது அந்த மக்களிடம் கேட்டே கையெழுத்திடுகிறோம் என்று கூறும் தொழிற்சங்கங்கள் சத்தமில்லாது கோரிக்கைகளை அனுப்பி வைப்பதைப்போன்றே புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளையும் தனித்தனியாக வாக்களிக்கும் மக்களுக்கே தெரியாது அனுப்பி வைத்துள்ளன”

புதிய அரசியலமைப்பு ஒன்றை நோக்கிய பயணத்தில் புதிய அரசாங்கம் ஈடுபட்டுள்ள இவ்வேளை மலையக சமூகம் சார்பில் பலரும் தமது யோசனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். 

சில சிவில் அமைப்புகள் பலரையும் ஒன்றிணைத்து கலந்துரையாடல்களை நடத்தி முக்கியமான கோரிக்கைகளை பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆவணங்களாக்கி, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணத்துவ குழுவிற்கு அனுப்பியுள்ளன. 

அதேபோன்று சில தனிநபர்கள், முன்னாள் அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோரும் நிபுணத்துவ குழுவிற்கு கோரிக்கைகளை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிகின்றது.

இந்நிலையில் இந்த மக்களின் சகல பிரச்சினைகளையும் அறிந்தவர்களாகவும் ஆனால் தீர்வுகள் குறித்து பாராளுமன்றிலோ அல்லது அரசாங்கத்தின் உயர்மட்ட பிரமுகர்களிடமோ உரிய அணுகுமுறைகளை கையாள முடியாத சூழ்நிலைகளில் இருக்கும் மலையக கட்சி பிரதிநிதிகள் எந்தளவுக்கு தமது யோசனைகளை எழுத்து மூலமாக முன்வைத்திருக்கின்றனர் என்பது தெரியாதுள்ளது. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது கோரிக்கைகளை நிபுணர் குழுவிடம் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிகின்றது. ஆனால் அதில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறித்து ஊடகங்களுக்கோ அல்லது மலையக மக்களுக்கோ தெரிந்துள்ளதா என்றால் அனைவரும் கையை விரிக்கின்றனர்.

அது தொடர்பான கலந்துரையாடல்கள் எந்தெந்த மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்தும் தெளிவுகள் இல்லை. அதேபோன்று மலையக மக்கள் முன்னணி தனியாக கோரிக்கைகளை கையளிக்கவுள்ளதாகத் தெரிகின்றது. தமிழ் முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும் இந்த அரசியல் சீர்திருத்த யோசனைகள் குறித்து எந்தெந்த மட்டங்களில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றன.

கூட்டணியாகவா அல்லது  கட்சிகளாகவா தமது யோசனைகளை நிபுணர் குழுவிடம் கையளிக்கப்போகின்றன என்பது குறித்தும் சரியான தகவல்கள் இல்லை. கூட்டணியாகவே கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு சாத்திய கூறுகள் உள்ளதாக கட்சி மட்டங்களிலிருந்து தெரிய வருகின்றது. 

இது வரை நிபுணத்துவ குழுவிடம் மலையக சமூகம் சார்பாக அனுப்பு வைக்கப்பட்டுள்ள சில முக்கியமான கோரிக்கைககள் பின்னவரும் தலைப்புக்களின் கீழ் காணப்படுகின்றன.

01) இனத்துவ அடையாளம்

02) அடிப்படை உரிமைகள்

03) அதிகார அலகுகள்

04) மொழிவுரிமை

05) நிலம்/காணி உரிமைகள்

06) நேரொத்த நடவடிக்கைகள்

07) இனவிகிதாசாரத்துக்கேற்ற பிரதிநிதித்துவமும் தேர்தல்கள் முறையும்

 இவை சமூகம் சார் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளவர்களினாலும் சமூக அக்கறை கொண்ட தனிநபர்களினாலும் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்கள், நேரடி அரசியலில் ஈடுபடாத தொழிற்சங்க பிரமுகர்களினாலும் முன்வைக்கப்பட்ட யோசனைகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவானவைகளாகும்.

கடந்த காலங்களிலும் கூட புதிய அரசியலமைப்பு யோசனைகள் குறித்து அரசாங்கங்களினால் பேசப்பட்டாலும் அவை சாத்தியப்படவில்லை. எனினும் மலையக சமூகம் சார்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இங்கு பிரதானமாக எழும் கேள்வி என்னவெனில், இந்த மக்களின் பிரச்சினைகளை அரசியலமைப்பு ஒன்றின் மூலம் மட்டும் தான் தீர்க்க முடியுமா என்பதாகும். 

இந்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் தலைமுறை கல்வியியலாளர்களும், பல்வேறு அரச மற்றும் தனியார் துறைகளில் பொறுப்பான பதவிகளில் உள்ள இளைஞர்களும் எழுப்பும் கேள்வியாகவே இது உள்ளது.

ஏனெனில் தொழிற்சங்க அரசியல் அதிகாரங்களை மலையக சமூகம் பெற்ற காலந்தொடக்கம் பெறத் தவறியவைகளை இவ்வாறு அரசியல் சீர்திருத்த யோசனைகளாக முன் வைப்பதற்கு சில மலையக கட்சிகள் அல்லது தொழிற்சங்கங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருவதன் காரணமாகவே இந்தக் கேள்வி எழுந்துள்ளது. 

இந்த நாட்டில் சுதந்திரத்துக்குப்பிறகு இந்திய வம்சாவளி மலைய சமூகத்துக்கு அனைத்துமே மிகவும் காலம் தாமதித்தே வழங்கப்பட்டதை அனைவரும் அறிவர். எனினும் சுமார் 40 வருட கால பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் அமைச்சுப்பதவிகளையும் கொண்டிருந்த இந்த சமூகத்துக்கு உரிய உரிமைகளையும் இதர சலுகைகளையும் பெற்றுத்தர இந்த மக்களின் பிரதிநிதிகள் தவறி விட்டதை இங்கு சுட்டிக்காட்டிட வேண்டும்.

இதே சமூகத்தைப் போன்று இந்த நாட்டின் சிறுபான்மை பிரிவினராக விளங்கும் முஸ்லிம் மக்களும் இவ்வாறு தட்டுத்தடுமாறி தமது சமூக உரிமைகளைப்பெற்றவர்கள் தாம். எனினும் இன்று அவர்களுக்கென்று தனி அதிகார அலகுகள், உயர்கல்வி நிறுவனங்கள், ஸ்திரமான அரசியல் பிரதிநிதித்துவங்கள் இருக்கின்றன. இதற்கு அக்காலத்தில் தீர்க்கதரிசமான முடிவுகளை  மிகவும் புத்திசாலித்தனமாக எடுத்த முஸ்லிம் தலைவர்களே காரணகர்த்தாக்கள்.

அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு சரி மலையகத்தின் அந்த கால தொழிற்சங்க தலைவர்கள் செயற்பட்டிருக்கலாம். தற்போது அரசியல் அதிகாரங்களைக் கொண்டு பெற்றிருக்க வேண்டிய பல உரிமைகளையும் சலுகைகளையும் இழந்து விட்டு அல்லது வேண்டுமென்றே அது குறித்து அக்கறை கொள்ளாது தற்போது புதிய அரசியல் சீர்திருத்த யோசனைகளில் அவற்றை உள்ளடக்குமாறு கேட்பது எந்தளவுக்கு பொருத்தப்பாடுள்ளது என்பது தெரியவில்லை.

இப்போதும் கூட மலையக கட்சிகள் சர்வசாதாரணமாக இத்தகைய தவறுகளை விடுகின்றன. புதிய அரசியல் சீர்திருத்த யோசனைகள் என்ற விடயத்தை இந்த அரசாங்கம் கொண்டு வந்த உடனேயே அவை எந்த பிரதிபலிப்புகளையும் வெளிக்காட்டவில்லை. மாறாக  அரசியலுக்கு அப்பாற்பட்டு  சமூகம் சார்ந்து செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அதில் செயலாற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், மற்றும் ஏனையோரே இது குறித்து அக்கறையுடன் செயற்பட்டவர்களாவர்.

சில சிவில் அமைப்புகள் அரசியல், தொழிற்சங்க பிரமுகர்களை தமது கலந்துரையாடல்களுக்கு அழைத்த போதும் அது குறித்து எவரும் அக்கறை காட்டியிருக்கவில்லை. ஒரு சில மலையக கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

பிரிந்தே அரசியல் செய்ய வேண்டும் அல்லது இயங்கவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்ட மலையக கட்சிகள் மற்றும்  தொழிற்சங்கங்கள் இந்த விடயத்தில் தமது முகத்தை திருப்பிக்கொண்டனவாகவே இருந்தன. இரண்டு கைகள் சேர்ந்தாலே ஓசை வரும் என்பதை உணராத இவர்கள் இந்த விடயத்திலும் தனித்து நின்று செயற்படுவதையும் அல்லது தமது தனித்துவத்தை வெளிக்காட்டுவதிலுமே முன்னின்றனர்.

தேர்தலில் கூட்டணியாக செயற்பட்டால் அதிக பிரதிநிதிகளை பெறலாம் என்ற சமூக ரீதியான கோரிக்கைகளையே நிராகரித்த மலையக கட்சிகள் இந்த மக்களுக்கான அரசியல் சீர்திருத்த கோரிக்கைகளையும் தனித்து நின்று முன்வைப்பதற்கு முடிவு செய்தன. 

இந்த காலகட்டத்திலும் இவர்கள் இவ்வாறு செயற்படும் பட்சத்தில் பேரினவாதத்துக்கு அது மிகவும் பேருதவியாகவே இருக்கப்போகின்றது. அனைவரும் வெவ்வாறாக பிரிந்து நின்று ஒரே கோரிக்கைகளை முன்வைப்பதை விட ஒன்றிணைந்து இவ்விடயத்தில் செயற்பட்டிருக்கலாம். சுயாதீனமாக இயங்கும் குழுவொன்றை தாபித்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்திருக்கலாம்.

தற்போது தனித்தனியாக இவர்கள் முன்வைத்திருக்கும் அல்லது முன்வைக்கப்போகும் கோரிக்கைகள் பற்றி இவர்களுக்கு  வாக்களிக்கும் மக்களுக்கு ஒன்றுமே தெரிய வாய்ப்பில்லை. சம்பள விவகாரத்தில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது அந்த மக்களிடம் கேட்டே கையெழுத்திடுகிறோம் என்று கூறும் தொழிற்சங்கங்களும் சத்தமில்லாது தமது கோரிக்கைகளை அனுப்பி வைத்திருக்கின்றன.

மலையக மக்களுக்குத் தெரியாமலேயே இங்கு பல சம்பவங்கள் நடக்கின்றன. அதில் இந்த புதிய அரசியலமைப்பு சீர்திருத்த கோரிக்கைகளும் அடங்குகின்றன. தோட்ட மட்டத்தில் இவ்விடயம் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி கலந்துரையாடல்களை இந்த அரசியல்வாதிகள் நடத்தியிருக்கலாம். கொரோனா காலத்தில் அது சாத்தியப்படாது என்றால் ஒரு தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு துறைகளில் உள்ளவர்களை தெரிந்தெடுத்திருக்கலாம். 

தனித்தே இயங்குவோம் என்ற மலையக அரசியலின் சுயநல போக்கு என்று ஒழிகின்றதோ அன்று தான் இந்த மக்களுக்கு விடிவு பிறக்கும். அது வரை எந்த புதிய அரசியல் சீர்திருத்தங்களாலும் இந்த மக்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.