(செ.தேன்மொழி)

கனரக வாகனங்களை ஓட்டும் சாரதிகள் வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னர் வாகனத்தை நன்கு பரீட்சித்து பார்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கலகெதர - ரம்புக்கன வீதியில் நேற்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைக்  கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலையின் நிர்வாகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை,  குறித்த பாரவூர்தியின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாகவே அதனை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மோட்டார் வாகன பரிசோதனை அதிகாரிகளிடமும் அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஸ் ,மோட்டார் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களை ஓட்டும் சாரதிகள், வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னர் வாகனத்தின் இயந்திர பிரிவு, வாகனச் சில்லுகள் மற்றும் சமிஞ்சை ஒளி விளக்குகள் ஒழுங்காக இயங்குகின்றதா? என்பது தொடர்பில் பரீட்சித்து பார்த்ததன் பின்னரே அதனை ஓட்டவேண்டும் என்றார்.