(எம்.மனோசித்ரா)
ரஷ்யாவிலிருந்து நாளை ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப்பயணிகளுடன் வரவிருந்த விமான சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார். எனினும் நாளை மறுதினம் உக்ரைனியிலிருந்து சில சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் , இன்றைய தினம் இலங்கைக்கு ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வரவிருந்தனர். அதற்கமைய ரஷ்யாவிற்கு சொந்தமான தேசிய விமான சேவை மூலம் அந்நாட்டிலிருந்து சுற்றுலாப்பிரயாணிகள் சிலர் வருகை தரவிருந்தனர். எனினும் அந்த விமான சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

28 மற்றும் 29 ஆம் திகதிகளிலும் உக்ரைனிலிருந்து சில சுற்றுலா பயணிகள் வருகை தரவுள்ளனர். இவர்கள் மத்தள விமான நிலையத்திற்கு வரவுள்ளனர். இது மதிப்பீட்டுக்கான நடவடிக்கையாகும். இந்த மதிப்பீட்டின் படி கிடைக்கப் பெறும் பிரதிபலனுக்கு அமையவே ஏனைய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடமளிப்பதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து சுற்றுலாப்பிரயாணிகள் வருகை தரவுள்ளமையால் அதனை இலக்காகக் கொண்டு விமான கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். இவ்வாறான நோக்கில் விமான கட்டணங்கள் குறைக்கப்படவில்லை.

மத்தள விமான நிலையத்தை ஆசியாவில் சிறந்த விமான நிலையமாக்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமைய சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வேறு எந்த நோக்கமும் கிடையாது என்றார்.