(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு 15 மட்டக்குளியை சேர்ந்த பெண் ஒருவர், கொரோனா தொற்றினால் மரணித்ததாகவும், அவரது ஜனாஸாவை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான சட்ட வைத்திய அதிகாரியின் உத்தரவுக்கு அமைய  உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு, வர்த்தமானிக்கு புறம்பாக அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

கேகாலையில்  செய்தியாளர் சந்திப்பை நடாத்தி, சிங்ஹலே நாம் அமைப்பின் தலைவர் ஜம்புரேவல சந்தரதன தேரர் இது தொடர்பில் கொழும்பு பிரதான  சட்ட வைத்திய அதிகாரி மீது குற்றம் சுமத்தினார்.

இந் நிலையில் மட்டக்குளி பெண்ணின் மரணம் தொடர்பிலும் அவரது  ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டமை தொடர்பிலும் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி  விஷேட வைத்திய நிபுணர் அஜித் தென்னகோன் மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில், அவர் தன் மீதான குற்றாச்சாட்டுக்களை முற்றாக மறுத்தார். 

கொவிட் தொற்றினால் உயிரிழந்த எந்த ஒருவரின் சடலத்தையும் அடக்கம் செய்வதற்காக, வர்த்தமானிக்கு அப்பால் சென்று தான் அனுமதியளிக்கவில்லை என அவர் கூறினார்.

கடந்த 12 ஆம் திகதி மாலை, கொழும்பு 15 மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 69  வயதான பெண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர் அவரது சடலம்  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய நிலையிலேயே வீட்டில் அப்பெண் மரணித்துள்ளார். குறித்த பெண்ணின் சடலம் மீது, கடந்த 14 ஆம் திகதி பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 பிரேத பரிசோதனைக்கு முன்னர்,  13 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்  அச்சடலத்துக்கு கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டதாக அப்பெண் தொடர்பில் வெளியிடப்பட்ட  பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை பிரகாரம், குறித்த பெண் 17 வருடங்களாக நீரிழிவு நோயினால் அவதியுற்று வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

அத்துடன், கடந்த நவம்பர் 29 ஆம் திகதி அப்பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முன்னெடுத்த பி.சி.ஆர். பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதியான நிலையில், அங்கிருந்து அவர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

இந் நிலையில் அங்கு கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில், அவரது உடலில் வைரஸுக்கு எதிரான தாக்கங்கள் உள்ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில் மீள கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்ப்ட்டுள்ளார். 

இந் நிலையில் அவர் டிசம்பர் 11 ஆம் திகதி  தேசிய வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதுடன், மறு நாள் அதாவது கடந்த 12 ஆம் திகதி  வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். 

அவர் தொடர்பில் மரணத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளிலும் கொவிட் 19 தொற்று அவரது சடலத்தில் உள்ளமை உறுதிசெய்யப்பட்டது.

 இந் நிலையில் இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி,  வைத்திய  பரிசோதனை நிலையம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய வைரஸ் தொடர்பிலான விஷேட நிபுணர்கள் மற்றும் தொற்று நோய் தடுப்புப் பிரிவினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன்படி குறித்த சடலம் நோய் காவியாக இருக்காது என முடிவெடுக்கப்பட்ட நிலையில், குறித்த மரணம் கொவிட் தொற்றினால் ஏற்பட்ட மரணம் அல்ல என பிரேத பரிசோதனைகளில் தீர்ப்பளிக்கப்பட்டது. 

அதன்படியே சந்தேகத்துக்கு இடமான எந்த காரணிகளும் இல்லை என்பதால், சடலம்  இறுதிக் கிரியைகளுக்காக உறவினர்களிடம் கையளிக்கலாம் என பிரேத பரிசோதனை அரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனை ஒத்த சம்பவமொன்று கடந்த 13 ஆம் திகதி அஹுங்கல்லை பகுதியிலும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.