(நா.தனுஜா)
மஹர சிறைச்சாலை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு இடையூறை ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கொள்ளப்படுகின்றன என்று சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா விசனம் வெளியிட்டிருக்கிறார்.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
மஹர சிறைச்சாலையில் நவம்பர் 29 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தினால் 11 கைதிகள் உயிரிழந்திருப்பதுடன் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் காயமடைந்திருக்கிறனர். இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றோம்.
அண்மைக்காலத்தில் இதனை மூடிமறைக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையை நாங்கள் அவதானித்திருக்கின்றோம். இதற்குப் பொறுப்புக்கூறவேண்டிய அமைச்சர்கள் கூட, குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிருந்து காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆகையினாலேயே உயிரிழந்தவர்களைப் பிரேதப்பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நாம் வலியுறுத்தினோம். அந்தவகையில் இதுவரையில் பிரேதப்பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட எட்டுப்பேரும் துப்பாக்கிச்சூட்டின் விளைவாகவே உயிரிழந்திருக்கிறார்கள். எனினும் நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இச்சம்பவத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிராகப் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் அரசாங்கத்தின் சார்பில் ஆஜரான சட்டமாதிபரின் பிரதிநிதி, 'பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஆஜராவதற்கு என்ன உரிமை இருக்கின்றது?' என்று கேள்வி எழுப்புகின்றார். அவர் இவ்வாறு கேள்வி எழுப்புவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், அவர்கள் சார்பில் ஆஜராகுமாறு சத்தியக்கடதாசி மூலம் எமக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். அவ்வாறிருக்கையில் அரசதரப்பு சட்டத்தரணி இவ்வாறு கேள்வி எழுப்புவது, இச்சம்பவத்தை மூடிமறைப்பதற்கு ஆளுந்தரப்பின் அமைச்சர்கள் முன்னெடுத்திருக்கும் முயற்சியின் ஓரங்கமா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM