நாட்டில் இடம்பெற்ற வெவ்வேறு வாகன விபத்துக்களில் 5 இளைஞர்கள் பலி : 30 பேர் காயம்

By T Yuwaraj

25 Dec, 2020 | 05:28 PM
image

(செ.தேன்மொழி)

நாடளாவிய ரீதாயில் இடம் பெற்ற வாகனவிபத்துகளில் 5 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

  வெல்லவாய

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லவாய - தணமல்வில வீதியில் மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த வேனுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழந்துள்ளார். குறித்தநபர் படுகாயமடைந்த நிலையில் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எதிலிவௌ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பில் வேன் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குட்டிகல

குட்டிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எம்பிலிபிட்டி - நோனாகம வீதியில் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற நபர் கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். துங்கம பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மிஹிந்தலை

மிஹிந்தலை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணப்படும் உப வீதி ஒன்றில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்திருந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மாத்தளை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொக்கரெல்ல

கொக்கரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தம்புள்ள - குருநாகலை பிரதான வீதியில் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் வந்த தனியார் பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்றோர் பொல்கொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உயிரிழந்துள்ளார். கொக்கரெல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிநொச்சி - வட்டக்கச்சி வீதியில் சாரதியின் கட்டுபாட்டை இழந்த முச்சக்கரவண்டி நீரோடை ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

மேற்படி விபத்துகள் தொடர்பான  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right