(எம்.மனோசித்ரா)

நாட்டு மக்கள் தொடர்பில் நாம் சிந்தித்திருந்த போதிலும் மக்கள் எம்மை கருத்தில் கொள்ளாது ஊடகங்களில் அரங்கேற்றப்பட்ட நாடகங்களுக்கும் நடிப்புகளிலும் ஏமாற்ற மடைந்துள்ளனர். இருப்பினும் மக்களை கைவிட நாம் தயாரில்லை. 

ஜனவரியிலிருந்து கடும் அரச எதிர்ப்பு போராட்டங்களை மக்களுக்காக  ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கும். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என தலைவர் ரணில் விக்கிரமசிங்க  கட்சி தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.  

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் அரசியலாக்கப்பட கூடாது. முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமல்லாது பௌத்த , இந்து மற்றும் கத்தோலிக்க மக்களுக்கும் இந்த விடயத்தில் பிரச்சினைகள் உள்ளன. 

எனவே சர்வமத தலைவர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளை உடன் அழைத்து அரசாங்கம் தீர்வு காண முற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை கொள்ளுப்பிட்டி இல்லத்தில்வைத்து கட்சி உறுப்பினர்களை சந்தித்து சமகால விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். இதன் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த கலந்துரையாடலில் சுகாதார அதிகாரிகளும் கலந்துக் கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.  

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் சடலங்கள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. எரிப்பதா ? புதைப்பதா ? என்று ஆராய பிரதமர் மீண்டும் குழு நியமித்துள்ளார். 

அதுவரையிலும் சடலங்கைளை பாரிய குளிரூட்டியில் வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான குளிரூட்டிகளில் வைரஸ் தொற்று அற்ற சடலங்களை வைப்பதும் பின்னர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சடலங்களை வைப்பதும் என்பதும் பிரச்சினைக்குறிய விடயமாகும். ஏனெனில் வைரஸ் குளிரூட்டியில் நீண்டகாலம் உயிர் வாழும் என வைத்திய அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

அதாவது கூடிய குளிரில் வைரஸ் மிகவேகமாக செயற்படும். எனவே தான் எந்தளவு தொற்று நீக்கம் செய்தாலும் குறித்த குளிரூட்டிகளில் வைரஸ்களை முழுமையாக அழிப்பதில் நெருக்கடி நிலை ஏற்படும். இவ்வாறானதொரு நிலையில் வைரஸ் தொற்றற்ற சடலத்தை வைக்கும் போது அதற்குள் கொவிட்-19 வைரஸ் ஊடுருவி பெரும் அபாயம் ஏற்படும்எனவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.

வைரஸ் தொற்று பரவுதல் , இதனால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் அதன் பின்னரான அடக்கம் என இங்கு பல பிரச்சினைகள் உள்ளது. எனவே அரசாங்கம் உடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அவ்வாறல்லாது கொரோனா சடலங்களை வைத்துக் கொண்டு அரசியல் விளையாடுவது முறையல்ல என இதன் போது ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

அவ்வாறு அரசியல் நோக்குடன் செயற்பட்டமையினாலேயே இன்று முஸ்லிம் சடலங்கள் தொடர்பான விவகாரம் மற்றுமொரு  தொற்று நோயாக பரவியுள்ளது. எவ்வாறாயினும் நாம் மக்கள் தொடர்பில் சிந்தித்திருந்த போதிலும் மக்கள் எம்மை கருத்தில் கொள்ள வில்லை. ஊடகங்களில் முன்னெடுக்கப்பட்ட நாடகங்களுக்கும் நடிப்புகளும் ஏமாற்ற மடைந்துள்ளனர்.

எனவே தான் வைரஸ் தொற்றில் மாத்திரமல்ல பொருளாதார ரீதியிலும் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். மக்கள் எம்மை எவ்வாறு நடத்தினாலும் அந்த மக்களுக்காக முன்நிற்க வேண்டியது எமது கடமையாகும்.  மேடைகளில் மாத்திரமல்ல வீதிகளிலும் மக்களுக்காக அரச எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுப்போம். ஜனவரியிலிருந்து கடும் அரச எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள் எனவும் அவர் கூறினார்.