(எம்.மனோசித்ரா)

ஐரோப்பிய நாடுகளில் பரவும் புதிய வகை வைரஸ் தொடர்பில் அந்த நாடுகளிடமும் , உலக சுகாதார ஸ்தாபனத்தினூடாகவும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

இவ்வாறான தகவல்களை மீளாய்வு செய்து இலங்கையில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார தரப்பினருக்கு அறிவிக்கப்படும் என்று பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை வைரஸ் பரவல் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் நாம் தொடர்ச்சியாக தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றோம்.

வைரஸ் பரவுவதாக கூறப்படுகின்ற நாடுகளிடமிருந்தும் குறிப்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தினூடாகவும் இந்த தகவல்கள் பெறப்படுகின்றன.

இவ்வாறு கிடைக்கப் பெறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் சுகாதார தரப்பினருக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.

இதன் முதற்கட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வரும் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் காணப்படும் நிலைமை தொடர்பில் ஆராய்ந்த பின்னர் , அத்தோடு இந்த வைரஸ் தொடர்பில் விசேட நிபுணர்களின் கருத்துக்கள் என்பவற்றையும் கவனத்தில் கொண்டு விமான சேவை இடை நிறுத்தத்தை தொடர்வதா அல்லது நீக்குவதாக என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றார்.