(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்டு தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் மரணம் சந்தேகத்துக்கு இடமானது என்பதால், வைத்திய அறிக்கையினை கோரி விசாரணை ஒன்றினை நடாத்த உத்தரவிடுமாறு கோரி, குறித்த குழந்தையின் பெற்றோர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளனர்.  

தமது குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது முதல் தகனம் செய்யப்பட்டது வரையிலான அனைத்து வைத்திய அறிக்கைகளையும்  முன்வைக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் இந்த மனுவூடாக கோரியுள்ளனர்.

குறித்த குழந்தையின் தந்தை மொஹம்மட் பாரூக் மொஹம்மட் பாஹிம் மற்றும் தாயார் பாத்திமா சப்னாஸ் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில்,  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளர், சுகாதார அமைச்சின் செயலர் உள்ளிட்டவர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

 தமது குழந்தைக்கு கொவிட் தொற்று இருந்தமையை உறுதி செய்ய எந்த வைத்திய அறிக்கைகளையும் வழங்காது வைத்தியசாலை தமது குழந்தையை பலவந்தமாக தகனம் செய்ததாக மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.