(நா.தனுஜா)

ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரசன்ன ஷமால் செனரத் எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் அப்பதவியைத் தொடர்ந்தும் வகிப்பார் என்று கட்சி அறிவித்திருக்கிறது. 

அத்தோடு ஜனவரியில் புதிய செயலாளரை நியமிப்பது குறித்து தீர்மானிக்கப்படவிருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று புதன்கிழமை கட்சித்தலைமையகமான சிறிகொத்தாவில் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.

சுமார் 20 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்வது தொடர்பில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை குறித்து கலந்துரையாடப்பட்டது. 

இதுவிடயத்தில் அரசாங்கம் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி சுமுகமான தீர்வொன்றை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரசன்ன ஷமால் செனரத் இம்மாதம் 31 ஆம் திகதி வரை அப்பதவியில் தொடர்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அதனை எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் நீடிப்பதற்கும் நேற்றைய செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கட்சிக்கான புதிய செயலாளரை நியமிப்பது தொடர்பில் எதிர்வரும் ஜனவரியில் ஆராயப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.