(நா.தனுஜா)

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில், சுகாதாரப்பிரிவினருக்கு அவசியமான பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை. 

சுகாதாரப்பிரிவினருக்கு அவசியமான பாதுகாப்பை உறுதி செய்யாமல் கொவிட் - 19 பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் தற்போது அவர்கள் நடத்தப்படும் முறையினால் அவர்களது மனங்களில் வெறுப்புணர்வு மாத்திரமே ஏற்படும் என்றும் என்று இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி தற்போது கண்டி வைத்தியசாலை, கராப்பிட்டிய வைத்தியசாலை, இலங்கை தேசிய வைத்தியசாலை, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை போன்ற சில வைத்தியசாலைகளிலும் கொவிட் - 19 இன் சிறிய கொத்தணிகள் உருவாகிவருகின்றன. 

இலங்கை தேசிய வைத்தியசாலையில் இதுவரை 50 இற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலைவரத்தைப் பொறுத்தவரை உலகநாடுகளும் இலங்கையும் தொடர்ந்தும் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளேயே இருக்கின்றன.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவது முழுமையாகத் தோல்வியில் முடிந்திருக்கிறது என்பது தெளிவாகப் புலனாகின்றது. 

அதுமாத்திரமன்றி இதுவிடயத்தில் சுகாதாரப்பிரிவினர் மிகவும் பாதுகாப்பற்ற நிலையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். வைத்தியாசாலைகளில் பெரும் எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு அவசியமான உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தவறியிருக்கிறது. 

அதேபோன்று கொவிட் - 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான போக்குவரத்து வசதியும் உணவும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

தென்மாகாணத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் சுகாதாரத்துறைசார் பணியாளர்களுக்கு என்-95 முகக்கவசத்தைப் பெற்றுத்தருமாறு சுமார் இருவாரகாலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இன்னமும் அவை வழங்கப்படவில்லை. அதேபோன்று மற்றுமொரு வைத்தியசாலையில் 100 என்-95 முகக்கவசங்கள் கோரப்பட்ட போதிலும் 10 முகக்கவசங்களே வழங்கப்பட்டிருக்கின்றன. 

இவ்வாறான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அண்மைக்காலத்தில் பிரென்டிக்ஸ், பேலியகொடை போன்ற பல்வேறு கொரோனா வைரஸ் பரவல் கொத்தணிகள் பதிவாகியிருந்த போதிலும், தற்போது கண்டி வைத்தியசாலை, கராப்பிட்டிய வைத்தியசாலை, இலங்கை தேசிய வைத்தியசாலை, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை போன்ற சில வைத்தியசாலைகளிலும் இவ்வாறான சிறிய கொத்தணிகள் உருவாகிவருகின்றன. இலங்கை தேசிய வைத்தியசாலையில் இதுவரை 50 இற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க, சுகாதாரப்பிரிவினருக்கு அவசியமான பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நாம் தொடர்ந்தும் கேள்வி எழுப்பிவருகின்றோம். கடந்த காலங்களில் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டபோது சுகாதார அமைச்சினால் விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்த நிலைவரம் சரிவரக் கையாளப்பட்டது. 

எனினும் உலகலாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்வது குறித்து மாதம் ஒருமுறையே கலந்துரையாடப்படுகின்றது.

மேலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கும் தாதியர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கொவிட் - 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்தமையின் விளைவாக தொற்றுக்குள்ளாகி நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரு தாதியருக்கு அவசியமான வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. 

அங்குள்ள கழிப்பறைகளை கழுவுமாறும் அவர்கள் கோரப்பட்டுள்ளனர். சுகாதாரப்பிரிவினருக்கு அவசியமான பாதுகாப்பை உறுதிசெய்யாமல் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றது என்ற உணர்வை அவர்களுக்குள் ஏற்படுத்த வேண்டும். எனினும் தற்போது அவர்கள் நடத்தப்படும் முறையினால் அவர்களது மனங்களில் வெறுப்புணர்வே ஏற்படும்.