(இராஜதுரை ஹஷான்)
சேனா படைப்புழு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். சோள பயிர்ச்செய்கையினை  பாதுகாக்க  உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிறு பயிர்ச்செய்கை அபிவிருத்தி ,அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு  இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சிறு ஏற்றுமதி உற்பத்திகளை மேம்படுத்த பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சோளப்பயிர்ச் செய்கையில் சேனா படைப்புழு தாக்கம் மீண்டும் ஆக்கரமித்துள்ளது. இதனால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சேனா படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். தேசிய உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் மஞ்சள்  உட்பட வாசனை திரவியங்கள் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டது. மஞ்சளுக்கு தற்போது சந்தையில் அதிக கேள்வி காணப்படுகிறது. உளர்மட்டத்தில் 4,000 ஆயிரம் மெற்றிக் தொன் மஞ்சள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வெகுவிரைவில் மஞ்சளுக்கான நிரந்தர விலை நிர்ணயிக்கக்கப்படும் என்றார்.