இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகளைப் பாதுகாப்பதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 

அந்த வகையில் இந்தியாவுக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கும் ஒப்பந்தத்தில் உலக வங்கியும் அந்நாட்டு அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளன.  இந்தியா சார்பாக டொக்டர் மொஹாபத்ராவும், உலக வங்கி சார்பாக இந்தியாவின் செயல் இயக்குநர் சுமிலா குல்யானியும் கையெழுத்திட்டுள்ளனர். 

கடந்த மே மாதத்தில் இந்தியாவினால் சமர்ப்பிக்கப்பட்ட 750 மில்லியன் டொலர்களுக்கான செயற்றிட்டம் உலக வங்கியினால் அங்கீகரிக்கப்பட்டது.  இந்நிலையில் முதலாம் கட்ட உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில் தற்போது 2ஆம் கட்டத்தொகை கையளிக்கப்படவுள்ளது. 

உலக வங்கியினால் வழங்கப்படவுள்ள  இந்த நிதி உதவியின் காரணமாக ஏழைகளின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று இந்திய நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடிகளிலிருந்து ஏழைக்கள் மற்றும் மோசமாக பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு போதுமான சமூக பாதுகாப்பை வழங்கலையே இந்த திட்டம் பிரதானமாக கொண்டுள்ளது.

இந்தியாவில் மாநில மற்றும் தேசிய அரசுகளுக்கு அவ்வாறான சமூகப் பாதுகாப்புத் திறனை இந்தத் திட்டம் வழங்கும் என்று இந்திய நிதித்துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.