இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ள தமது அணியின் எந்த வீரர்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் நேற்றைய தினம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியானது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் கீழ் இரு போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாபிரக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்த புதிய சுற்று சோதனைகளுக்குப் பின்னர், இலங்கையுடன் மோதவுள்ள தென்னாபிரிக்க அணியில் இரு வீரர்கள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவர்கள் தொடரிலிருந்து விலக்கப்பட்டு மாற்று வீரர்கள் அணியில் உள்வாங்கப்பட்டனர். 

தென்னாபிரிக்க அணியின் அனைத்து உறுப்பினர்களும் கடந்த வெள்ளிக்கிழமை உயிர் பாதுகாப்பு சூழலுக்குள் நுழைந்து 20 ஆம் திகதி மூன்றாவது சோதனைக் உட்படுத்தப்பட்டனர்.

அந்த சோதனை முடிவுகளிலேயே எவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்று நிரூபனமாகியுள்ளது.

அதனால் தென்னாபிரிக்க அணியில் உள்ள அனைத்து வீரர்களும் இன்று முழு அணியாக தங்களது பயிற்சிகளை தொடங்கியுள்ளனர்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி‍ டிசம்பர் 26 -30 வரை செஞ்சுரியனிலும், இரண்டாவது போட்டி 2021 ஜனவரி 03 - 07 வரை ஜோகன்னஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது.