நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக இறுதியாக பதிவான இரு கொரோனா மரணங்களில் ஒருவர் சிறுவன் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சிறுவன் தன்கொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என ஆவார்.

உயிரிழந்த சிறுவன் இரத்தப்புற்றுநோய் (லுகேமியா) காரணமாக அபேக்ஸா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே கொரோனா தொற்றுக்கு இலக்காகி தற்போது உயிரிழந்துள்ளார்.  

இதேவேளை நேற்றையதினம் பதிவான மற்றைய கொரோனா மரணம் கொழும்பு -7 பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின எண்ணிக்கை  இலங்கையில் 183 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 37 058  ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 29 300 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 8577 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

427 நபர்கள் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் 16 000 தொற்றாளர்கள் 

ஒக்டோபர் 4 ஆம் திகதி நாட்டில் கொவிட் பரவலின் இரண்டாம் அலை இனங்காணப்பட்டதையடுத்து கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 16 000 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

அன்றிலிருந்து நேற்று செவ்வாய்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இங்கு 16 210 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

கொழும்பிற்கு அடுத்ததாக  கம்பஹாவில் 8373 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதே போன்று களுத்துறையில் 2663 தொற்றாளர்களும் , கண்டியில் 1393 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.