(இராஜதுரை ஹஷான்)

பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கவில்லை. கால சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு உரிய தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை  பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இணையவழியூடாக அரசாங்க தகவல்  திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை  தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் பலதரப்பட்ட வழிமுறைகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பண்டிகை காலத்தில் நாடுதழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்க இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் குறித்து அது தொடர்பான தொழினுட்ப குழு உரிய தீர்மானம் எடுக்கும். பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றினால் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த  வேண்டிய தேவை ஏற்படாது.

அசாதாரண  சூழ்நிலையில் நாட்டு மக்களை அரசாங்கம்  நெருக்கடிக்குள்ளாக்காது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் முதல் கட்டத்தின் போது அரசாங்கம் சுமார் 80 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் உரிய நிவாரணம் வழங்கியுள்ளது. நாட்டு மக்களை அரசாங்கம் ஒருபோதும் நெருக்கடிக்குள்ளாக்காது. அசாதாரண சூழ்நிலை தொடர்ந்தால் நிவாரணம் வழங்க தயாராக உள்ளோம் என்றார்.