(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் மரணங்கள் இடம்பெறும் முறை தொடர்பில் முறையான மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு, அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் காலத்தில் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க எச்சரித்திருக்கிறார்.

அத்தோடு, ஏற்கனவே தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் பட்சத்தில் அவர்கள் மரணிப்பதற்கான வாய்ப்பு உயர்வாக உள்ளது. எனவே அத்தகையவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு உரியவாறான சிகிச்சைகளை வழங்கி, மரணங்களைக் குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், எமது நாட்டில் கொரோனா பரவத்தொடங்கி சுமார் 10 மாதங்கள் கடந்துள்ளன. இக்காலப்பகுதியில் நாடு பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளன. கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஆரம்பமாகி 10 வாரங்கள் ஆகின்றன. ஒக்டோபர் ஆரம்பத்தில் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த 10 வாரங்களுக்குள் பத்து மடங்காக அதிகரித்திருக்கின்றது. தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நோக்குகையில், இது நாட்டில் மிகவேகமாகப் பரவிவருகின்றமையைப் புரிந்துகொள்ள முடிகின்றது.

அதுமாத்திரமன்றி கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த இருவாரகாலத்திற்குள்ளாகவே தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பொன்று ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலவரம் மிகவும் அவதானத்திற்குரியதாகும். அதேவேளை லண்டனில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலையில் அதிகரிப்பொன்று ஏற்பட்டிருப்பதால், கிறிஸ்மஸ் பண்டிகைக்காலப் பகுதியில் நகரத்தை முழுமையாக முடக்குவதற்குத் திட்டமிடப்பட்டு வருகிறது. அதுமாத்திரமன்றி லண்டனில் இருந்துவரும் விமானங்களை தமது விமான நிலையங்களுக்குள் அனுமதிக்காதிருப்பதற்கு மேலும் பல நாடுகள் தீர்மானித்திருக்கின்றன.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பொன்று ஏற்படுமாயின், அது சற்று பாரதூரமானதும் நெருக்கடிக்குரியதுமான நிலையாகக்கொள்ளப்பட முடியும். எனினும் இலங்கையில் மரணங்களின் எண்ணிக்கையில் அத்தகைய அதிகரிப்பொன்று இன்னமும் ஏற்படவில்லை.

 ஆகவே கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்களைக் குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் பட்சத்தில் அவர்கள் மரணிப்பதற்கான வாய்ப்பு உயர்வாக உள்ளது. எனவே அத்தகையவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு உரியவாறான சிகிச்சைகளை வழங்கி, மரணங்களைக் குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெடுக்கப்பட்டு  வரும் அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு மறுபரிசீலனைக்கு உட்படுத்துவது மிகவும் அவசியமாகும். உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், நாடும் மக்களும் பாரிய நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்படும்.