(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளில் 100 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் , பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மன்னம்பிட்டி வீதி நீரில் மூழ்கியது

இன்று பகல் வேளையில் பெய்த கடும் மழையின் காரணமாக பொலன்னறுவை மட்டக்களப்பு வீதியில் மன்னம்பிட்டி கல்லேல்ல பிரதேசத்தில் சிறிய வாகனங்களின் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. கடும் மழையின் காரணமாக வீதி நீரில் மூழ்கியமையே இதற்கு காரணமாகும்.

சோமாவதி புனித பூமிக்கு சிறிய வாகனங்கள் செல்வதும் இதனால் இடைநிறுத்தப்பட்டிருந்ததாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மாத்தளையில் ஒருவர் உயிரிழப்பு 

இதேவேளை மாத்தளை கலேவல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது : 

வடக்கு மற்றும் கிழக்கில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு , கிழக்கு, வட-மத்திய மத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் , அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடை மழை பெய்யக் கூடும்.

ஏனைய பகுதிகளில் பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். இதன் போது 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு 

கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. 

கண்டி மாவட்டத்தின் தொலுவ மற்றும் உடுதும்பர பகுதிகளுக்கும் மாத்தளை மாவட்டத்தின் எலஹெர பகுதிக்கும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.