(இராஜதுரை ஹஷான்)
தெங்கு உற்பத்தி கைத்தொழிலை அபிவிருத்தி செய்தல், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை பாதுகாத்தல் மற்றும் இலங்கை தேங்காய் எண்ணெய் குறியீட்டு நாமத்தை பாதுகாக்க அமைச்சின் உள்ளக செயலணியை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச  மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரன ஆகியோர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக தேங்காய்  எண்ணெய் இறக்குமதிக்கு  பதிலாக  உலர் தேங்காயை அரசுக்கு சொந்தமான பீ.சீ.சீ நிறுவனம் மூலம் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், நாட்டில் பாம் எண்ணெய் பாவனையைக் குறைத்து தேங்காய் எண்ணெய் பாவனையை ஊக்குவிப்பதற்காக நுகர்வோர் உரிமை மற்றும் சுகாதார காரணிகளின் அடிப்படையில் தூய்மையாக்கப்பட்ட  பாம் எண்ணெயை மாத்திரம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 இலங்கை தேங்காய் எண்ணெயின் குறியீட்டு நாமத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 'தேங்காய் எண்ணெயுடன் வேறு எண்ணெய் வகைகளைக் கலப்படம் செய்து விற்பதற்கு முற்றாக தடை விதிக்கப்படும். மேலும், தெங்கு உற்பத்தியாளர்கள் பெற்றுக்கொண்டுள்ள கடன்தொகையை மீளச் செலுத்துவதற்கான சலுகைகளை வழங்கல், தெங்கு உற்பத்தி திறனை அதிகரிக்க சலுகை பக்கேஜை அறிமுகம் செய்தல், இத்திட்டங்களை கண்காணிக்க அமைச்சின் உள்ளக செயலணி ஒன்றை அமைக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.