அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் 1 கோடியே 80 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 319,000 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், அமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில்,டெலாவேர் மாகாணத்தில் நெவார்க் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் ஜோ பைடன் கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். 

ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வு அமெரிக்க செய்தி தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. 

அப்போது பேசிய அவர், “ மருந்து கிடைக்கும்பொழுது அதனை எடுத்துக் கொள்ளுங்கள், கவலைப்பட ஒன்றுமில்லை." என நாட்டு மக்களை  வலியுறுத்தியுள்ளார்.

பைடனின் மனைவி ஜில் பைடனும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.