(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில், சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படும்போது எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்பதுடன் இவ்விடயத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி வலியுறுத்தியிருக்கிறது.

இதுகுறித்து ஐக்கிய தேசியக்கட்சி இன்று திங்கட்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

எதிர்வரும் வருடத்திலிருந்து நாட்டை சுற்றுலாப்பயணிகளுக்காகத் திறப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் தீர்மானம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியிருக்கிறோம்.

அண்மைக்காலத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் வெகுவாக அதிகரித்து வருவதோடு, அவற்றில் அநேகமானவை தமது நாட்டை மீண்டும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதையும் அவதானிக்க முடிகின்றது.

அரசாங்கம் நாட்டை மீளத்திறப்பதற்கான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, வெளிப்படைத்தன்மையும் செயற்பட வேண்டும் என்று நாம் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முன்னெடுக்கப்படும் தீர்மானங்களை நாம் எதிர்க்கமாட்டோம். எனினும் அதுகுறித்த முறையான திட்டமிடலை அரசாங்கம் முன்வைக்கவேண்டும்.

கொரோனா வைரஸ் தடுப்புமருந்தைப் பயன்படுத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான அரசாங்கத்தின் திட்டத்தை சமர்ப்பிக்குமாறும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

உலகலாவிய ரீதியில் அநேக நாடுகள் தடுப்புமருந்தைக் கொள்வனவு செய்து, தமது பிரஜைகளுக்கு வழங்க ஆரம்பித்திருக்கின்றன. எனினும் இதுகுறித்து சுகாதார அமைச்சர் எதனையும் கூறமறுத்திருப்பதுடன் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதிக்காகக் காத்திருப்பதாக மாத்திரமே கூறிவருகின்றார்.

சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படும்போது எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் உரிய சுகாதார தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்களா? நாட்டின் எந்தெந்தப் பகுதிகளுக்குச் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்? என்பது போன்ற கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.