சிலி நாட்டில் முகக்கவசம் அணியாமல் செல்பி எடுத்த ஜனாதிபதிக்கு அபராதம்  விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் ஜனாதிபதி செபாஸ்டியன் பினெரா தனது சொந்த ஊரான கச்சாகுவா நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றபோது, அங்கிருந்த ஒரு பெண்ணின் விருப்பத்துக்காக அவருடன் செல்பி படம் எடுத்துக்கொண்டார்.

செல்பி படத்தில் ஜனாதிபதியும் பெண்ணும் ஒரு வெயில் நாளில் ஒருவருக்கொருவர் சமூக இடை வெளி பேணாமல், முகக்கவசம் அணியாமல் நிற்பது தெரிய வந்ததை அடுத்து 3,500 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் செல்பி படம் வெளிவந்த சிறிது நேரத்திலேயே பினெரா மன்னிப்பும் கேட்டுள்ளார்.

அந்நாட்டில் பொதுவெளியில் முகக்கவசம்  தொடர்பான விதிமுறையை மீறும் நபர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது.

மேலும், அங்கு கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 585,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 16,154 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.