ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மொஹமட் அஷ்ரப் கானி, காபூலின் அலோகைல் பகுதியில் அதிநவீன வசதிகளுடன் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்கியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத் தலைவர் ஃபர்ஹான் யூசெப்சாய்,

இதுவரை நாங்கள் பெரும்பாலான போட்டிகளை இந்தியாவில் விளையாடியுள்ள நிலையில், காபூலில் ஒரு புதிய கிரிக்கெட் மைதான நிர்மாணத்தின் பின்னர், சர்வதேச போட்டிகளை தமது நாட்டிற்கு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.

அது மாத்திரமன்றி தலைநகர் காபூலின் மையத்தில் உள்ள சர்வதேச வீரர்கள் தங்கள் மைதானத்தில் விளையாடுவதை எங்கள் மக்கள் காண்பார்கள்.

இதேவேளை காபூலில் ஒரு அதிநவீன சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிக்கும் திட்டத்திற்கும், கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு எப்போதும் தனது ஆதரவினை வழங்கும் ஜனாதிபதி அஷ்ரப் கானிக்கு தனது நன்றிகளையும் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

சுமார் 35,000 பார்வையாளர்களை அமரும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த அரங்கம் ஐந்து நட்சத்திர விருந்தினர் மாளிகை, ஒரு நிலையான நீச்சல் குளம், உட்புற மற்றும் வெளிப்புற அரங்குகள், சுகாதார மருத்துவ வசதிகள், மசூதி மற்றும் வாகன தரிப்பிடம் உள்ளிட்ட பல வசதிகளை உள்ளடக்கியுள்ளது.