(இராஜதுரை ஹஷான்)

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின்  கொள்கைக்கு அமையவே கல்கிஸ்சை புகையிரத நிலையத்தில் நேர அட்டவணை உள்ளூர் பயணிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  கல்சிஸ்சை  புகையிரத நிலையம் சீனர்களுக்கு மாத்திரம் என கடந்த  காலங்களில் சமூக  வலைத்தளங்களில் வெளியான செய்தி பொய்யானது. இச்சம்பவம் குறித்து விசாரணையினை முன்னெடுத்து அரசகரும மொழிகள்  ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்க பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கல்கிஸ்சை புகையிரத நிலையத்தில் சீன மற்றும் பிரெஞ்சு மொழியில்  காட்சிப்படுத்தப்பட்ட நேர அட்டவணை  குறித்து சமூக வலைத்தளங்களில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்பட்டன. இச்சம்பவம் குறித்து அரசகரும மொழிகள் ஆணைக்குழுக்கு பொது மக்களிடமிருந்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து ஆணைக்குழு கடந்த  வாரம் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

கல்கிஸ்சை புகையிரத நிலையத்தில் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் கொள்கைக்கு அமைய மூன்று அரச மொழிகளிலும் உள்ளூர் பயணிகளுக்காக நேர அட்டவணை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கல்கிஸ்சை பகுதி  பிரதான சுற்றுலாத்தளமாக காணப்படுகின்றது. சுற்றுலா மையங்களில் உள்ள புகையிரதங்கள் தனியார் நிறுவனங்களால் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. குறித்த நிறுவனங்களின் விளம்பரங்கள் புகையிரத நிலையங்களில் காட்சிப்படுத்தப்படும். இவ்வடிப்படையில் கல்கிஸ்சை புகையிரத நிலையத்தை அபிவிருத்தி செய்த அதி சொகுசு ஹோட்டல் தமது சுற்றுலா பிரயாணிகளுக்காக சீனா மற்றும் பிரெஞ்சு மொழியில் தூர பிரதேச  புகையிரத  சேவை நேர அட்டவணையை காட்சிப்படுத்தியது.

வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப்பிரயாணிகள் அனைவருக்கும் ஆங்கில மொழி தெரியும் என எதிர்பார்க்க முடியாது. சுற்றுலாத்துறை சேவையை மேம்படுத்தும் நோக்கில் சுற்றிலாபிரயாணிகளின் தாய் மொழியில்  நேர அட்டவணை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புகையிரத நிலையங்களில்  தமிழ் மொழியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நேர அட்டவணை மற்றும் பெயர் பலகைகளில் எழுத்து பிழை உள்ளது. அவை மாறுப்பட்ட அர்த்தங்களை தோற்றுவித்துள்ளது. என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் மொழியிலான பெயர் பலகைகளில் உள்ள எழுத்து பிழைகளை திருத்த புகையிரத திணைக்கள மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே கல்கிஸ்சை புகையிரதம் சீனர்களின் புகையிரதம் என வெளியான செய்தியில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது.  புகையிரத நிலையங்களில் அரச மொழிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.