நடைபெற்றுவரும் 2016 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பரீட்சை நேரத்திற்கு ஒரு மணித்தியாலம் தாமதமாகி வந்தமையினாலேயே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் பிரதி ஆணையாளர் எஸ்.பிரனவராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

களனி ஹேனேகம மத்திய மகாவித்தியாலயத்தில் பரீட்சை நிலைய இலக்கம் 340 க்கு பொறுப்பாகவிருந்த மேற்பார்வையாளர் இன்று காலையில் பணிநீக்கம் செய்யப்பட்டார். பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்கள் சகலரும் 8 மணிக்கு சேவைக்கு வரவேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

இவ்வாறான நிலையில் குறித்த மேற்பார்வையாளர் ஒரு மணி நேரம் காலதாமதமாகி வருகை தந்தது மட்டுமல்லமால் 9.30 பின்னரேயே பரீட்சைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அதனால் மாணவர்களின் பரீட்சை நேரத்தை ஒரு மணித்தியாலம் நீடிக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்தது. அதேநேரம் மேற்பார்வையாளரும் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய பரீட்சை நிலையங்களில் சுமூகமான முறையில் பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றது என்றார்.