கொவிட் - 19 க்கான தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடம் 10 மில்லியன் ரூபா கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே வேளை ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றிடமிருந்தும் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் என்பவற்றின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்படும் சர்வதேச தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீதமானோருக்கு தடுப்பூசியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கான செலவு அதன் செயற்திறன் மற்றும் உற்பத்தி செலவைப் பொறுத்தது என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 

உலக வங்கியுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் போது தடுப்பூசி குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். 

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கும், அதனை உகந்த வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும் அதிக செலவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சுகாதார சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அடுத்த கட்டமாக யாருக்கு வழங்குவது என்பதை தீர்மானிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.